ஷா ஆலம், பிப் 8- ஊராட்சி மன்றங்களின் அதிகார வரம்பிற்கு
அப்பாற்பட்ட பகுதிகளில் உள்ள கிராம வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி
விதிக்கப்படாது.
இத்தகைய வீடுகள் சபாக் பெர்ணம், தஞ்சோங் காராங் மற்றும் கோல
சிலாங்கூரில் அதிகம் காணப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
மேலும், கோல லங்காட், உலு லங்காட் மற்றும் கோம்பாக்கின் உலு பத்து
பூர்வக் குடியினர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம வீடுகள்
ஊராட்சி மன்ற அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்று அவர்
சொன்னார்.
இத்தகைய வீடுகளுக்கும் அதில் குடியிருப்பவர்களுக்கும் மதிப்பீடு வரி
அல்லது நில வரி விதிக்கப்படாது என்பது இதன் பொருளாகும் என அவர்
தெரிவித்தார்.
கிராம வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி விதிக்கப்படுவதாக வதந்திகள்
பரப்பப்படுகின்றன. அந்த செய்தியில் உண்மையில்லை என்று அமிருடின்
தெளிவுபடுத்தினார்.
அதே சமயம் இச்சலுகையை மலிவு விலை வீடுகளின்
உரிமையாளர்களும் முன்பிருந்து அனுபவித்து வருகின்றனர் என்று மாநில
அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
அவர் தெரிவித்தார்.
இந்த மதிப்பீட்டு வரி விலக்களிப்புக்கு தாங்கள் தகுதியானவர்கள் எனக்
கருதும் தரப்பினருக்காக இட வரைபடத் தயாரிப்பு பணியில் நாங்கள்
ஈடுபட்டு வருகிறோம். கிராமங்களில் உள்ள சில நில உரிமையாளர்கள்
வாடகை வீடுகள் உள்ளிட்ட சொத்துகளைக் கொண்டுள்ளனர் என்று அவர்
தெரிவித்தார்.
இது போன்ற நடவடிக்கைகள் வர்த்தக ரீதியிலானவை என்பதோடு
தாங்கள் வாடகைக்கு விட்ட வீடுகளுக்கான வரியைச் செலுத்தும்
ஆற்றலையும் அவர்கள் கொண்டுள்ளனர். எனினும் தாங்களும் வரி
சலுகைக்கு தகுதியானவர்கள் என கருதினால் அதற்கான விண்ணப்பத்தை
அவர்கள் செய்யலாம் என்றார் அவர்.




