சுபாங் ஜெயா, பிப் 7- இலக்கவிய்ல தொழில்முனைவோரியல் துறையில்
ஈடுபட ஊக்குவிப்பு வழங்குவதன் மூலம் இளம் பெண்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்த மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது.
இந்நோக்கத்திற்காக இளம் பெண்கள் தொழில்முனைவோர் டிஜிட்டல்
மீடியா ஊக்குவிப்பு அமைப்பிற்கு (உசாஹாவனிதா) 230,000 வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
அன்ஃபால சாரி கூறினார்.
இந்த திட்டத்தின் நோக்கம் தெளிவானது. டிஜிட்டல்
தொழில்முனைவோரியலின் முக்கியத்துவம் மீதான விழிப்புணர்வை இளம்
பெண்களுக்கு ஏற்படுத்துவது மற்றும் பயிற்றுநர்களுடன் நேரடித்
தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குவது
ஆகியவையாகும் என்று அவர் தெரிவித்தார்.
அப்பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துவது அதனைத் தொடர்ந்து அவர்கள் சமூகத்திற்குத் தங்களின்
பங்களிப்பை வழங்குவது ஆகியவை இதில் முக்கியமானதாகும் என்றார்
அவர்.
நேற்று இங்குள்ள ஜினோ தங்கும் விடுதியில் உசாஹாவனிதா திட்டத்தின்
தொடக்க நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு 200 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நான்கு கட்டங்களை உள்ளடக்கிய இந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்படும்ம் 30
பெண்களுக்கு அடிப்படைப் பயிற்சி, மேம்பட்ட பயிற்சி, செய்முறைப்
பயிற்சி மற்றும் போட்டி ஆகியவை இடம் பெறும்.
யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் மாநில தகவல்
தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கழகம்
ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.




