கிள்ளான், பிப் 6 - கித்தா சிலாங்கூர் இரயில் திட்டம் கோலாலம்பூர் மற்றும்
பெட்டாலிங் ஜெயாவுக்கும் மாநிலத்தின் மேற்குக் கரை நகரங்களுக்கும்
இடையிலான மையப் புள்ளியாகக் கிள்ளான் மாநகரை உருவாக்கும்.
இந்த போக்குவரத்து ஒருங்கமைப்பின் வாயிலாகக் கிள்ளான் கோல
சிலாங்கூர் மற்றும் தஞ்சோங் காராங் வட்டாரத்தில் புதிய குடியிருப்புகள்
உருவாகி பல்வேறு தொழில்துறைகளின் வாயிலாகப் பொருளாதாரம்
புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பும் கிட்டும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த இரயில் திட்டத்தின் வாயிலாக மாநிலத்தின் மேற்கு கரை
நகரங்களில் வசிப்பவர்கள் இரயில் சேவையைப் பயன்படுத்தி 30
நிமிடங்களில் கிள்ளான், பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலம்பூரைச்
சென்றடைய முடியும். இதன் மூலம் சொந்த வாகனங்களைப்
பயன்படுத்துவதையும் தவிர்க்க இயலும் என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள விண்ட்ஹாம் ஹோட்டலில் நடைபெற்ற கிள்ளான் அரச
மாநகர் மன்றப் பிரகடன நிகழ்வில் உரையாற்றிய போது அமிருடின்
இவ்வாறு தெரிவித்தார் .
கிள்ளான் ஆற்றின் கரையோரம் நெடுகிலும் மேற்கொள்ளப்படும் கெர்பாங்
மெரிடைம் சிலாங்கூர் (எஸ்.எம்.ஜி.) பொருளாதார மேம்பாட்டு
மண்டலத்தின் வளர்ச்சிக்கும் கிள்ளான் உயிர்நாடியாக விளங்கும் என்றும்
அவர் குறிப்பிட்டார்.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்த எஸ்.எம்.ஜி.
திட்டத்தை மாநில அரசின் துணை நிறுவனமான லண்டசான் லுமாயான்
சென். பெர்ஹாட் நிறுவனம் மேற்கொள்கிறது. கிள்ளான் ஆற்றின்
நெடுகிலும் உள்ள 56 கிலோ மீட்டர் பகுதியை மேம்படுத்துவதை இந்த
திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
வெள்ளத்தை தடுப்பதற்கு ஏதுவாக கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தி
அகலப்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.




