கோம்பாக், ஜன 29 - இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித்
திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது முதல் 998,000
வெள்ளி இழப்பீட்டுத் தொகை உறுப்பினர்கள் மற்றும் வாரிசுகளுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
விபத்துகள் மற்றும் மரணங்களை உள்ளடக்கிய 91 சம்பவங்களை அந்த
தொகை உள்ளடக்கியிருந்ததாக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி
புசார் கழகத்தின் நிறுவன சமூக பொறுப்புணர்வு மற்றும் தொடர்புப்
பிரிவுத் தலைவர் அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
இன்சான் தக்காபுல் காப்புறுதித் திட்டம் இன்னும் பதிவுக்குத்
திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதில் பங்கு கொள்ளுமாறு நாங்கள்
கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.
மரபு ரீதியான காப்புறுதி காலாவதியானவர்கள் இன்சான் தக்காபுல்
திட்டத்தின் மூலம் பதிவு செய்யலாம். எந்த பிரச்சனையும் கிடையாது
என்று அவர் சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள கம்போங் மிலாயு வீரா டாமாயில் நடைபெற்ற கேம்பாக்
தொகுதி நிலையிலான மக்கள் பிரிவுத் தின நிகழ்வில் கலந்த கொண்டப்
பின்னர் அவர் இதனைக் கூறினார். மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி இந்த நிகழ்வைத் தொடக்கி வைத்தார்.
இன்சான் குழு காப்புறுதித் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பிறந்து 30 நாள் ஆன குழந்தைகள்
முதல் 80 வயதானவர்கள் வரை பதிவு செய்யலாம். இதற்கான பிரீமியத்
தொகையை மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
விபத்து காரணமாக நிரந்தர முடத்தன்மை ஆளானவர்கள் மற்றும்
உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம்
10,000 வெள்ளி வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.




