ஷா ஆலம், ஜன 24 - சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம்
(பி.கே.பி.எஸ்.) கடந்தாண்டு தொடங்கி உற்பத்தி செய்து வரும் தானியச்
சோளத்திற்குக் கால்நடைத் தீவனத் தொழில் துறையினர் மற்றும் சிறிய
அளவில் கால்நடை வளர்ப்போர் மத்தியில் அமோக வரவேற்பு
கிட்டியுள்ளது.
தாங்கள் உற்பத்தி செய்யம் சோளம் இறக்குமதி செய்யப்படும் சோளத்தைக்
காட்டிலும் விலைக் குறைவாக உள்ளதால் இதற்கு அபரிமித் ஆதரவு
கிட்டியுள்ளதாகப் பி.கே.பி.எஸ். குழுமத்தின் தலைமைச் செயல்முறை
அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.
எங்களின் சொந்த நிலத்தில் சோளம் அறுவடை செய்யப்படுவது
தொடர்பான செய்தி பரவியவுடன் கால் நடை வளர்போர் மற்றும்
கால்நடைத் தீவன விநியோகிப்பாளர்கள் எங்களைத் அணுகத் தொடங்கினர்
என்று அவர் சொன்னார்.
சோள உற்பத்திச் செலவினம் குறைவாக உள்ளதால் இறக்குமதி
செய்யப்படும் சோளத்தை விட வெ.100 முதல் வெ.250 வரை குறைவான
விலையில் விற்க இயலும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்
என்று அவர் குறிப்பிட்டார்.
சோளத்திற்கான தேவையை ஈடு செய்வதற்காகக் கோல லங்காட்டில்
இன்னும் எஞ்சியிருக்கும் 258 ஹெக்டர் நிலப்பரப்பில் சோளத்தைப்
பயிரிடும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர்,
ரவாங்கில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த பயிரீட்டுத் திட்டம் விரைவில்
தொடங்கப்படும் என்றார்.
கோல லங்காட்டில் 40 லட்சம் வெள்ளியை உட்படுத்திய இந்த சோளப்
பயிரீட்டுத் திட்டம் கிராம மற்றும் வட்டார மேம்பாடுத் துறை அமைச்சின்
ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் வேளையில் ரவாங்கில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு 80 லட்சம் வெள்ளி வரை செலவிடப்படுகிறது என்றார் அவர்.
கோல லங்காட்டில் மொத்தம் உள்ள 121 ஹெக்டர் நிலப்பரப்பில் 16.9
ஹெக்டரை உள்படுத்திய பகுதியில் கடந்தாண்டு தானியச் சோளம்
பயிரிடப்பட்டது. முதல் அறுவடையின் போது 118 டன் உயர் தரம்
கொண்ட சோளம் அறுவடை செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.




