கிள்ளான், ஜன 22- இங்குள்ள தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி புசாரின் இந்திய சமூகத்திற்கான சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அதிகாரப்பூர்மாகத் திறந்து வைத்தார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்கராஜா, சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பாண்டியன், டத்தோ வி.எல்.காந்தன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த திறப்பு விழாவில் உரையாற்றிய டாக்டர் குணராஜ், திருக்குறளை உலகிற்குத் தந்த திருவள்ளுவரை நினைவுக் கூறும் வகையில் இந்த சிலை இங்கு நிறுவப்பட்டது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
திருவள்ளுவர் சிலையைப் பள்ளி வளாகத்தில் நிறுவுவதற்குத் திட்டமிட்டு அதனை குறுகிய காலத்தில் நிறைவேற்றிய பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை தாம் பெரிதும் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஏற்று, இரண்டே தினங்களில் அதனைச் செய்து முடித்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்கராஜாவுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகப் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசு கூறினார்.
சுமார் ஐயாயிரம் வெள்ளி செலவிலான இந்த சிலை, சிற்பிகளைக் கொண்டு இரண்டே நாட்களில் வடிக்கப்பட்டதாகத் தங்காராஜா தெரிவித்தார்.




