சுபாங் ஜெயா ஜன 19 ; பூச்சோங் ஜாலான் வாவாசான், தாமான் வாவாசானில் நில நிலைதன்மையை உறுதிப்படுத்தும் முதற்கட்ட முக்கிய பணிகள் ஜூலையில் முழுமையாக நிறைவடையும் என்று சுபாங் ஜெயா மேயர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இரும்பு தடுப்பு நிறுவும் பணி முடிந்துவிட்டதாகவும், பிரதான வடிகால் பழுதுபார்க்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.
“வீட்டின் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருக்க இரும்பு தடுப்பு பொருத்தும் பணி வெற்றிகரமாக முடிந்தது.இப்போது அடுத்த கட்டமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமான துண்டிக்கப்பட்ட பிரதான வாய்க்காலை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
"ஒப்பந்ததாரர் வெள்ளம் ஏற்படாமல் இருக்க பிரதான வடிகாலை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பழுதுபார்ப்பு பணி முடிவடைய ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் ஜூலையில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது," என அவர் கூறினார்.
அப்பகுதியில் உள்ள ஒன்பது வீடுகளில் வசித்த வந்த மொத்தம் 29 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற உத்தரவிடப் பட்டனர்.
– பெர்னாமா




