பெட்டாலிங் ஜெயா, ஜன 19 - பெட்டாலிங் மாநகர் மன்றத்தின் 2024/ 2025 ஆம் ஆண்டு தவணைக்கான கவுன்சிலர்கள் நான்கு இந்தியர்கள் உட்பட 21 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.
நேற்று இங்குள்ள எம்.பி.பி.ஜே. தலைமையகத்தில் பெட்டாலிங் ஜெயா துணை டத்தோ பண்டார் அட்னான் ஹாஜி ஹசான் முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பெட்டாலிங் ஜெயா வட்டார மக்களுக்கு மன நிறைவளிக்கும் வகையில் சேவை வழங்குவதற்கு ஏதுவாக ஆக்ககரமான பங்களிப்பை மாநகர் மன்றத்திற்கு வழங்கும் நோக்கில் இந்த உறுப்பினர்கள் நியமனம் அமைவதாக துணை டத்தோ பண்டார் டத்தோ அஸ்னான் கூறினார்.வரும் 2030ஆம் ஆண்டில் பெட்டாலிங் ஜெயாவை விவேக மற்றும் வசிப்பதற்கு உகந்த நகராக உருவாக்கும் இலக்கை அடைவதில் இந்த தவணைக்கான பழைய மற்றும் புதிய உறுப்பினர்களின் நியமனம் பெரிதும் துணை புரியும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
மாநில அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதிலும் மாநில அரசின் அபிலாஷைகள் மற்றும் தொலைநோக்கு இலக்கு ஆகியவற்றை அடைவதற்கு ஏதுவாக சேவைத் திறனை அதிகரிப்பதிலும் மாநகர்மன்ற உறுப்பினர்கள் முக்கிய பங்கினை ஆற்றுவார்கள் என நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் சொன்னார்.




