ஷா ஆலம், ஜன 19 - ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 11வது டத்தோ பண்டாராகச் செரேமி தர்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் நேற்று தொடங்கி அமலுக்கு வந்தது.
டத்தோ பண்டார் பதவிக்கான நியமனக் கடிதத்தை மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் செரேமியிடம் நேற்று வழங்கியதைத் தொடர்ந்து இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை மாநில அரசு தலைமை செயலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது.
ஐம்பதொன்பது வயதான செரோமி, டாக்டர் நோர் புவாட் அப்துல் ஹமிட்டுக்குப் பதிலாக டத்தோ பண்டார் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் நோர் புவாட் போக்குவரத்து அமைச்சின் நிர்வாகப் பிரிவின் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து அப்பதவிக்கு செரேமி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஷா ஆலம் துணை டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்ட செரமி, கடந்தாண்டு அக்டோபர் 27ஆம் தேதி முதல் இடைக்கால டத்தோ பண்டாராகச் செயல்பட்டு வந்தார்.
சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள இவர், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் உள்பட பல ஊராட்சி மன்றங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2022 டிசம்பர் வரை செலாயாங் நகராண்மைக் கழகத்தின் துணை டத்தோ பண்டாராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.




