SELANGOR

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தில் எட்டு இந்தியர்களுக்கு வாய்ப்பு

19 ஜனவரி 2024, 3:58 AM
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தில் எட்டு இந்தியர்களுக்கு வாய்ப்பு
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தில் எட்டு இந்தியர்களுக்கு வாய்ப்பு

கோல குபு பாரு, ஜன 19 - உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2024-2025 ஆம் ஆண்டு தவணைக்கான நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 22 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் எண்மர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் பி.கே.ஆர். ஜசெக மற்றும் அமானா கட்சிகளின் சார்பாக இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகராண்மைக் கழகத்தின் தலைமைக் கொறடாவாகிய பி. புவனேஸ்வரன், வீ.முருகன், ஆர்.ராஜசேகர், எஸ்.ஸ்ரீகாந்த், பி.ராஜேஷ் ராவ், எம்.திலகேஸ்வரி, எஸ்.சின்னையா, ஏ.துரை அன்பழகன் ஆகியோர் நகராண்மைக் கழகத்தில் இடம் பெற்றுள்ள இந்தியப் பிரதிநிதி களாவர்.

இம்முறை பி.கே.ஆர். சார்பாக ஐம்பது விழுக்காடு இந்தியர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள எட்டு பி.கே.ஆர். பிரதிநிதிகளில் நால்வர் இந்தியர்களாவர்.  உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜனின் தீவிர முயற்சியின் வழி இந்திய சமூகத்திற்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் இங்குள்ள நகராண்மைக் கழக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது தலைமையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த புதிய தவணைக்கு மாவட்ட ஓராங் பெசார் ஒருவரும் பி.கே.ஆர். கட்சி சார்பில் எண்மரும் ஜசெக சார்பில் எண்மரும் அமானா கட்சி சார்பில் ஐவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தவணைக்காலம் இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி எதிர்வரும் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய நகராண்மைக் கழக தலைவர் முகமது ஹஸ்ரி, புதிய தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகராண்மைக் கழக உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை முழு ஈடுபாடு, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் உயர்நெறியுடன் மேற்கொள்வர் எனத் தாம் எதிர்பார்த்ததாக கூறினார்.

ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் கொள்கை வகுப்பாளர்களாகவும் செயல்படும் அதே வேளையில் மக்களுக்காக ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படை போக்குடனும் சேவையாற்றுவதில் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.