ஷா ஆலம், ஜன 18- தேசிய நீர் சேவை ஆணையம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் அமல் செய்யவிருக்கும் நீர்க் கட்டண சீரமைப்பு காரணமாகக் கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் குறைந்த அளவிலான அதாவது வெ.1.50 முதல் வெ.6.00 வரையிலான கட்டண உயர்வை எதிர்கொள்ள வேண்டி வரும்.
பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை பாதுகாப்பதையும் செலவின அதிகரிப்பால் அவர்களுக்குச் சுமை ஏற்படுவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த மாதாந்திரக் கட்டண உயர்வு ஒரு கப் காப்பியின் விலை அளவுக்கு அதாவது வெ.1.50 முதல் வெ.6.00 வரை மட்டுமே இருக்கும். 6.50 வெள்ளியை இந்த கட்டண உயர்வு தாண்டாது என்று அவர் சொன்னார்.
நிலையான செயலாக்க நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக அனைத்து நீர் சேவை வழங்குநர்களும் அமல்படுத்திய வர்த்தகத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டண உயர்வு அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இங்குள்ள ஐ-சிட்டி, டபுள்ட் ரீ ஹோட்டலில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் டிஜிட்டல் பள்ளியின் ஏ.ஐ. நுசான்தாரா திட்ட பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியா மற்றும் லபுவானில் அடுத்த மாதம் தொடங்கி குடிநீர் கட்டண சீரமைப்பு அமல்படுத்தப்படும் என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் நேற்று கூறியிருந்தது.
இந்த கட்டண உயர்வு ஒரு கன மீட்டருக்கு 22 காசை உள்ளடக்கியிருக்கும் என்றும் அது தெளிவுபடுத்தியது.
இந்த நீர் கட்டண உயர்வால் மக்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை தணிப்பதற்கான திட்டங்களை மாநில அரசு அமல் செய்யும் என்று அமிருடின் உறுதியளித்தார்.
இந்த நீர் கட்டண உயர்வின் எதிரொலியாக மக்களுக்கு உதவக்கூடிய முன்னெடுப்புகள் குறித்த விபரங்களை இன்று பின்னேரம் வெளியிட உள்ளதாக அவர் சொன்னார்.