ஷா ஆலம், ஜன 11: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் பல மேம்பாடுகளுடன் மறுசீரமைக்க பட்டுள்ளது. இதனால் அதிகமான குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள் என்று விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேஎஸ்பி) நடத்தும் விற்பனைத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இஷாம் ஹாஷிம் கூறினார்.

"இத்திட்டம் RM10 மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ் வழக்கம் போல் தொடரும், ஆனால் இம்முறை பண்டிகை காலங்களின் போது அதை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தப்படும்.

"இருப்பினும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (கேபிகேஎம்) நடத்தும் சிலாங்கூர் அக்ரோ மடாணி திட்டம் மற்றும் கோப்ராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் (கோஹிஜ்ரா) நடத்தும் சிலாங்கூர் அக்ரோ மார்கேட், ஜுவாலான் பிரிஹாத்தின் ரக்யாட் திட்டங்களுடன் இணைந்து ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை மேம் படுத்தியுள்ளோம்.

"இந்த நான்கு விற்பனையைத் திட்டங்களும் செயல்படுத்துவது பற்றி நாங்கள் விவாதிப்போம், இதன் மூலம் விற்பனை இடம் மற்றும் நேரம் ஆகியவை முடிவு செய்யப்படும். அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் இந்த விற்பனையை விரிவுபடுத்த வேண்டும்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஜனவரி 15 முதல் மீண்டும் ஏஹ்சான் ரஹ்மா விற்பனை தொடரும்.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்வதோடு, உள்ளூர்வாசிகளுக்கு அதன் வரம்பை விரிவுபடுத்தும் வகையில் செகி ஃப்ரெஷ் உடன் பிகேபிஎஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.