ஷா ஆலம், ஜன 10: நேற்று நிலவரப்படி, ஜாலான் வாவாசான், தாமான் வாவாசான், பூச்சோங்கில் உள்ள பிரதான வடிகாலைப் பழுது பார்க்கும் பணி 9.3 சதவீதத்தை எட்டியுள்ளது.
இந்த பழுது பார்க்கும் பணி 83 மீட்டர் வடிகாலை உள்ளடக்கியது என சுபாங் ஜெயா மாநகராட்சி கார்ப்பரேட் மற்றும் மூலோபாய மேலாண்மை துறை கூறியது.
"இரும்பு தடுப்பு பொருத்தும் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் வடிகால் பழுது பார்க்கும் பணி 9.3 சதவீதத்தை எட்டியுள்ளது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தின் படி தீவிரமாகத் தொடர்கிறது.
"வடிகால் மற்றும் சாலை கட்டமைப்பு புனரமைப்பு உள்ளடக்கிய நிரந்தர உறுதிப்படுத்தலுக்காகப் பழுது பார்க்கும் பணி 30 வாரங்களில் முடிவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது," என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணியை விளக்குவதற்காக டத்தோ பண்டார் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாடிம் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இடையேயான சந்திப்பும் நேற்று நடைபெற்றதாகச் சுபாங் ஜெயா மாநகராட்சி மேலும் கூறியது.
"இந்த சந்திப்பு அமர்வில் 13 குடியிருப்பாளர்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
"நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைத் தற்காலிகமாகச் பூச்சோங்கில் உள்ள தாமான் வாவாசான், பெர்மாத்தா ஶ்ரீ அபார்ட்மென்ட்டில் எம்பிஎஸ்ஜே தங்க வைத்துள்ளது," என்று அவர் கூறினார்.
குறிப்பிட்ட இடத்தில் 775 இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன என கின்ராறா மாநில சட்டமன்ற உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.




