ஷா ஆலம், ஜன 9 - இங்குள்ள கோத்தா கெமுனிங் ஒன்ஸிடியம் பகுதி
குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிகள் பிரச்சனைக்குத்
தீர்வு காண கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்
சம்புநாதன் வாக்குறுதியளித்துள்ளார்.
ஒன்ஸிடியம் ஹைட்ஸ் குடியிருப்பாளர் சங்கப் பிரதிநிதிகளுடன்
சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வினை மேற்கொண்ட
போது அவர் இந்த வாக்குறுதியை வழங்கினார்.
விளையாட்டு பூங்கா வளாகத்தில் குப்பைகள் முறையாக அகற்றப்படாதது,
அந்த பூங்காவிலுள்ள காய்ந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்ததாது,
சி.சி.டி.வி. எனப்படும் கண்காணிப்பு கேமராக்களின் மின் இணைப்பு
கம்பிகள் முறையாக பொருத்தப்படாதது, போதுமான அளவு சாலை
விளக்குகள் இல்லாதது, கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீர்
தேங்கியுள்ளது உள்பட குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு
பிரச்சனைகளைக் குடியிருப்பாளர் சங்கப் பிரதிநிதியான டத்தோ நாதன்
பிரகாஷிடம் எடுத்துரைத்தார்.
இப்பிரச்சனைகளைத் தாம் கவனத்தில் கொள்வதோடு கும்புலான் டாருள்
ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், டி.என்.பி. பொதுப்பணித்துறை,
உள்ளிட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு
காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இவ்வட்டார குடியிருப்பாளர்கள் நோய் அபாயத்திலிருந்து விடுபட்டு உகந்த
சூழலில் வசிப்பதற்கு ஏதுவாக இங்கு நிலவும் அனைத்து அடிப்படை
வசதிப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என அவர் சொன்னார்.




