SELANGOR

சிலாங்கூர் ஏற்பாட்டில் ஆசிய பூப்பந்துப் போட்டி- பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்குகிறது

8 ஜனவரி 2024, 8:26 AM
சிலாங்கூர் ஏற்பாட்டில் ஆசிய பூப்பந்துப் போட்டி- பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்குகிறது

ஷா ஆலம், ஜன 8 - இவ்வாண்டிற்கான ஆசிய பூப்பந்துப் போட்டியைச்

(பி.ஏ.டி.சி.) சிலாங்கூர் மீண்டும் ஏற்று நடத்துகிறது. இப்போட்டி எதிர்வரும்

பிப்ரவரி மாதம் 13 முதல் 18 வரை செத்தியா ஆலம் மாநாட்டு மையத்தில்

நடைபெறும்.

இந்த பிரசித்திப் பெற்ற போட்டியில் ஜப்பான், சீனா, இந்தோனேசியா,

கொரியா, சிங்கப்பூர், இந்தியா உள்பட அனைத்துலக நிலையிலான 300

போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என விளையாட்டுத் துறைக்கான

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இவ்வாண்டு மே மாதம் சீனாவின் செங்டுவில் நடைபெறவிருக்கும் 2024

ஆம் ஆண்டு தோமஸ் கிண்ண மற்றும் உபர் கிண்ண பூப்பந்து

போட்டிகளுக்கு விளையாட்டாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும்

களமாக இந்த போட்டி விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

இப்போட்டியில் பங்கேற்கும் மலேசிய ஆட்டக்காரர்களில் லீ ஷி ஜியா,

ஏரோன் சியா, கோ ஊய் யிக் ஆகியோரும் அடங்குவர். எனினும்

இப்போட்டியில் கலந்து கொள்ளும் ஆட்டக்காரர்களின் முழு பட்டியல்

இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.

மேலும், ஜப்பானின் அகானே யாமாகுஷி, கெந்தோ மோமோத்தா,

சீனாவின் லீ ஷிபெங், சென் யூ பெய், இந்தியாவின் பிராணாய் எச்.எஸ்

மற்றும் பி.வி. சிந்து, இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுக்கா,

ஜோனதன் கிறிஸ்டி ஆகியோரும் இப்போட்டியில் கலந்து

கொள்ளவிருக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மாநில விளையாட்டு மன்றம், ஆசிய பூப்பந்து

சங்கம் மற்றும் மலேசிய பூப்பந்து சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்

சிலாங்கூர் அரசு முதன் முறையாக இந்த போட்டியை ஏற்று நடத்தியது.

அப்போட்டியில் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, தென் கொரியா,

ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், கஸகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த

142 விளையாட்டாளர்கள் பங்கு கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.