ஷா ஆலம், ஜன 8: பலகோங் தொகுதியில் வசிப்பவர்களின் வசதிக்காக பொது உள்கட்டமைப்புகளைப் பழுதுபார்த்தல் மற்றும் உருவாக்குவதற்கு அதன் மாநில சட்டமன்ற உறுப்பினர் எண்ணம் கொண்டுள்ளார்.
கடந்த நவம்பர் தொடங்கி 286,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் பத்து 11 சமூக மண்டபம், செராஸ்சில் மேம்பாடு பணி மேற்கொள்ளப் பட்டதாக வெயின் ஓங் சுன் வெய் கூறினார்.
“உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சிடம் இருந்து இந்த ஒதுக்கீடு முழுமையாகப் பெறப்பட்டுள்ளது. மேலும் பூப்பந்து மைதானத்துடன் கூடிய மண்டபம் இந்த பிப்ரவரியில் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம்.
"இந்த மண்டபத்தை ஒரு வேளையில் சுமார் 200 பயனர்கள் பயன்படுத்தக்கூடிய அளவில் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் கொண்டாட்டங்கள் அல்லது விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதைப் பயன்படுத்தலாம்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
மேலும், பெர்சியாரான் சுஹாகாசே பண்டார் துன் ஹுசைன் ஓனில் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தையும் கட்ட திட்டமிட்டுள்ளதாக சுன் வெய் விளக்கினார்.
"இந்த மைதானத்தை அப்பகுதிக்கு அருகிலுள்ள மதப் பள்ளி மாணவர்கள் உட்பட உள்ளூர்வாசிகள் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
"பலகோங் தொடர்ந்து முன்னேறி வருவதை உறுதி செய்வதற்காக உள்ளூர்வாசிகள் காணவும் அவர்களின் புகார்களைக் கேட்கவும் நான் அப்பகுதியில் எனது களப்பயணங்களை மேற்கொள்வேன்" என்று அவர் தெரிவித்தார்.




