கிள்ளான், ஜன 2- இங்குள்ள தாமான் மில்லேனியம் குடியிருப்பாளர்
சங்கத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்ட பாதுகாப்புக் குழுவைச் செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நேற்று தொடக்கி
வைத்தார்.
அந்த குடியிருப்பு பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி மற்றும் வீடு
புகுந்து திருடும் சம்பவங்களை முறியடிக்கும் நோக்கில் குடியிருப்பாளர்
சங்கம் இந்த பாதுகாப்பு குழுவை உருவாக்கியுள்ளது.
இந்த பாதுகாப்புக் குழுவைத் தொடக்கி வைத்து உரையாற்றிய டாக்டர்
குணராஜ், குருநாதன் தலைமையிலான இந்த குடியிருப்பாளர் சங்கம்
முன்னெடுத்துள்ள இந்த திட்டம் இப்பகுதியில் குற்றச் செயல்கள்
குறைவதற்குத் துணை புரியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி
செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை நான் பெரிதும்
வரவேற்கிறேன். இத்திட்டத்திற்கு இங்குள்ள குடியிருப்பாளர்கள்
ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளது பெரிதும் பாராட்டுக்குரியது.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கு பொருத்தப்பட்டுள்ள
இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) மற்றும் இரும்பு வேலிகள்
குற்றச் செயல்களைக் குறைப்பதில் பெரிதும் துணை புரியும் என அவர்
சொன்னார்.
வட்டார மக்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தி வரும்
குடியிருப்பாளர் சங்க நிர்வாகத்தினரை தாம் பெரிதும் பாராட்டுவதாகக்
கூறிய அவர்,. நாம் ஒன்று பட்டுச் செயல்படுவதன் மூலம் குற்றச்
செயல்களைத் துடைத்தொழிப்பதில் போலீஸ் துறைக்கும் உதவ முடியும்
என்றார்.




