SELANGOR

சிலாங்கூர் மக்களின் நலனே மாநில அரசின் முதன்மை இலக்கு- மந்திரி புசார் உறுதி

2 ஜனவரி 2024, 3:14 AM
சிலாங்கூர் மக்களின் நலனே மாநில அரசின் முதன்மை இலக்கு- மந்திரி புசார் உறுதி

செலாயாங், ஜன 2- சிலாங்கூரிலுள்ள பல இன, சமய மக்களின் நலனே

மாநில அரசு நிர்வாகத்தின் முதன்மை இலக்காகும் என்று மந்திரி புசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநில அரசின் உதவித் திட்டங்களும் முன்னெடுப்புகளும் சரும நிறம்

மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து

வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

பல சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தாய் மொழிப் பள்ளிகள் உள்பட

சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களுக்கும் மாநில அரசு வழங்கி

வரும் பல்வேறு உதவித் திட்டங்கள் இதற்கு சான்றாக விளங்குகின்றன

என்று அவர் சொன்னார்.

வழிபாட்டுத் தலங்களுக்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களை வழங்கும்

மாநிலமாகவும் சிலாங்கூர் விளங்குகிறது. இதன் வழி சம்பந்தப்பட்ட

வழிபாட்டுத் தலங்கள் நில பிரீமியத் தொகையைச் செலுத்த

வேண்டியதில்லை. கடந்த காலங்களில் அதிகத் தொகையை உள்ளடக்கிய

இந்த பிரீமியத் தொகையினால் இத்தகைய வழிபாட்டுத் தலங்களை

உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

எதற்காக நாம் இதனைச் செய்கிறோம்? காரணம், “இறைவன் மீது

நம்பிக்கை வைத்தல்“ என்ற ருக்குன் நெகாரா கோட்பாட்டின் மீது நாம்

நம்பிக்கை வைத்துள்ளோம். பள்ளிவாசல்கள், இந்து, பௌத்த ஆலயங்கள்

மற்றும் தேவாலயங்கள் முறையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்

பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில மக்களின் நல்வாழ்வு, நிலைத்தன்மை தொடர்ந்து

நிலைத்திருப்பதை உறுதி செய்ய இந்த பொறுப்புகளை மாநில அரசு

தொடர்ந்து நிறைவேற்றி வரும் எனவும் அவர் கூறினார்.

மாநிலத்தில் அமைதியும் நல்லிணக்கமும நிலைத்திருப்பதை உறுதி

செய்ய பிற மதங்களின் நம்பிக்கையை மதித்து நடக்கும்படி

மாநிலத்திலுள்ள பல்லினங்களையும் சேர்ந்த மக்களை அவர் கேட்டுக்

கொண்டார்.

பிற மதங்களை மதிப்பவர்களாகவும் அதன் மதிப்புகளை

புரிந்தவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். பிரிவினையைத் தூண்ட சில

தரப்பினர் நாளுக்கு நாள் முயன்று வருவதால் பிற மதங்களை மதிக்கும்

உணர்வுள்ளவர்களாக நாம் இருப்பது அவசியம் என்றார் அவர்.

தகாத மற்றும் பிறரைச் சிறுமைப்படுத்தும் வார்த்தைகளால் யாருக்கும் எந்த

பலனும் இல்லை. சமூகத்தில் உள்ள பல்லினத் தரப்பினரை நாம் புரிந்து

கொள்ளவும் மதிக்கவும் வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குள்ள செலாயாங், ராமர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு

சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத்

தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர், செலாயாங் பாரு இந்தியன்

செட்டில்மெண்டைச் சேர்ந்த 15 சிறந்த மாணவர்களுக்குப் பரிசுக்

கூடைகளை வழங்கினார்.

இதனிடையே, இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு மாநில அரசு கடந்தாண்டு

100,00 வெள்ளியை வழங்கியதாக ஸ்ரீ ராமர் ஆலயத்தின் தலைவர்

எம்.புஷ்பாகரன் கூறினார். புதிய பல்நோக்கு மண்டபத்தின்

கட்டுமானத்திற்கும் பல்வேறு சமய மற்றும் கல்வி நடவடிக்கைகளை

மேற்கொள்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.