ஷா ஆலம், டிச 29 - வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு
ஏதுவாக அதிக அளவிலான சிறு வர்த்தகர்களுக்கு உதவிகளை வழங்குவது
தனது தலையாய நோக்கமாகும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர்
மரியாம் அப்துல் ரஷிட் கூறினார்.
வர்த்தகத் துறைகளில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும் அதிலுள்ள
சவால்களை எதிர்கொள்வதற்கும் ஏதுவாகக் கலந்துரையாடல்களை
நடத்துவது உள்பட பல்வேறு தொழில்முனைவோரியல் திட்டங்களை
அமல்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
வர்த்தக வாய்ப்புகள் தவிர்த்து மேலும் அதிகமான சிறு தொழில்
முனைவோர் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதை காண தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தாம் விரும்புவதாக அவர்
குறிப்பிட்டார்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் கடைகள் மற்றும் அங்காடிக் கடைகளை
அவர்கள் நடத்த ஊக்குவிப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து
வருகிறோம் என அவர் கூறினார்.
மக்கள் நலன் மற்றும் அடிப்படை வசதி மேம்பாடும் தனது முக்கிய
இலக்குகளில் ஒன்றாக விளங்குவதாகக் கூறிய அவர், பழுதடைந்த பொது
மண்டபம் மற்றும் சிறார் விளையாட்டு திடல் மற்றும் கால்பந்து
மைதானம் ஆகியவற்றை சீரமைப்பதும் இதில் அடங்கும் என்றார்.
இவை தவிர, கழிவுகளைப் பணமாக மாற்றும் திட்டத்தையும் நாங்கள்
அமல்படுத்தவிருக்கிறோம். பிளாஸ்டிக், காகிதம், மற்றும் அட்டைப்
பெட்டிகளை சேகரித்து வைத்து இரு வாரங்களுக்கு ஒரு முறை வரும்
குத்தகையாளரிடம் அதனைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்
என்றார் அவர்.




