SELANGOR

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகளை பொருத்தும் பணி 85.6 சதவீதம் நிறைவடைந்துள்ளது

27 டிசம்பர் 2023, 7:23 AM
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகளை பொருத்தும் பணி 85.6 சதவீதம் நிறைவடைந்துள்ளது

ஷா ஆலம், டிச.27 - தாமான் வாவாசான், பூச்சோங்கில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணை நிலைநிறுத்துவதற்கான இரும்பு தடுப்புகளை பொருத்தும் பணி 85.6 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதை சுபாங் ஜெயா மாநகராட்சி நேற்று மாலை X சமூக வலைதளப் பதிவில் உறுதி செய்துள்ளது.

அதன் துணை மேயர் முகமட் சுல்கர்னைன் சே அலி மற்றும் பொறியியல் துறை இயக்குனர் ரோஸ்லி முகமட் யூனுஸ் ஆகியோர் முன்னேற்றத்தை கண்காணிக்க சம்பவ இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் நடப்பது குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், ``அடுவான் எம்பிஎஸ்ஜே`` கைப்பேசி செயலி மூலமாகவோ அல்லது கவுன்சிலின் கட்டளை மையத்தை 03-8024 7700 என்ற எண்ணில் நேரடியாக அழைப்பதன் மூலமாகவோ அவர்கள் எதிர்கொள்ளும் ஏதேனும் சிக்கல்கள் புகாரளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டிசம்பர் 25ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இரும்பு தடுப்புகளைப் பொருத்தும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முன்னால் உள்ள பகுதியிலும், அங்குள்ள வடிகால்களிலும் முதன்மைக் கவனம் செலுத்தி, 375 இரும்பு தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன என சுபாங் ஜெயா மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் தெரிவித்தார்.

இது முடிந்ததும், சேதமடைந்த வடிகால்களில் தற்காலிகமாக நீரை திருப்பி விடுவது மற்றும் வடிகால்களின் ஓரங்களில் 400 இரும்பு தடுப்புகளை நிறுவுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் இரண்டாம் கட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

டிசம்பர் 16 அன்று இரவு 7.30 மணியளவில் தாமான் வாவாசானில் ஜாலான் வாவாசான் 3/9 மற்றும் ஜாலான் 3/14 ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்பது வீடுகளில் இருந்து 29 குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும், இச்சம்பவத்தில் நான்கு வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தன, இருப்பினும் உயிர் சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.