செர்டாங், டிச 18 - விலை மலிவாக இருந்த போதிலும் பேரங்காடிகளுக்கு
இணையான தரத்தைக் கொண்டிருக்கும் காரணத்தால் மாநில அரசின்
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைக்குப் பொதுமக்கள் பெரும் ஆவலுடன்
காத்திருக்கின்றனர்.
பொருள்களின் விலை தரமாக இருக்கும் காரணத்தால் ஏஹ்சான் ரஹ்மா
மலிவு விற்பனைகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட வரிசையில்
காத்திருப்பதை தாம் பொருட்டாக கருதவில்லை என்று தனியார் நிறுவனப்
பணியாளரான லீஸ்மான் கமாருஸமான் (வயது 48) கூறினார்.
இங்கு விற்கப்படும் கோழி உள்ளிட்ட சமையல் பொருள்கள் புதியவையாக
உள்ளதோடு அரிசியும் தரமானதாக உள்ளது. நான் மட்டும் இவ்வாறு
புகழ்ந்து பேசவில்லை. பொதுவாக இந்த விற்பனையில் கலந்து கொள்ளும்
அனைவரின் கருத்தும் இதுவாகவே உள்ளது என அவர் தெரிவித்தார்.
இங்கு விற்கப்படும் அரிசி, முட்டை, கோழி, இறைச்சி, சமையல்
எண்ணைய், மீன் போன்றப் பொருள்களை நான் பேரங்காடிகளில்
இப்போதெல்லாம் வாங்குவதேயில்லை. என இங்கு நடைபெற்ற செர்டாங்
தொகுதி நிலையிலான மலிவு விற்பனையில் கலந்து கொண்ட போது
அவர் சொன்னார்.
இதனிடையே, இந்த விற்பனை குறித்து கருத்துரைத்த நுர் பர்ஹானா
முகமது யூசுப் (வயது 37), சோதித்து பார்க்கும் நோக்கில் தொடக்கத்தில்
தாம் இங்கு பொருள்களை வாங்கியதாகவும் இங்கு கட்டுபடி விலையில்
பொருள்கள் விற்கப்படுவதைக் கண்டு இரண்டாம் முறையும் இங்கு
வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பொருள்கள் பேரங்காடியின் தரத்தில் சிறிதும் குறைந்தவை அல்ல.
அதே சமயம் விலையும் குறைவாக உள்ளதை அறிந்து நான் பெரிதும்
வியந்து போனேன். மாநில அரசுக்கு நன்றி கூறிக் கொள்ளும் அதேவேளையில் இந்த விற்பனை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
சிலாங்கூர் வாக்காளர்கள் குறிப்பாகச் செர்டாங் தொகுதி மக்கள் இந்த
வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக வரிசை எண்களை
வழங்குவதில் இத்தொகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகச்
செர்டாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி தெரிவித்தார்.




