கிள்ளான், டிச 18- காப்பார், 14வது மைலில் சட்டவிரோதக் குப்பை கொட்டும்
மையங்களாகச் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான 12 லோட்
நிலங்கள் தொடர்பான விவகாரம் மேல் நடவடிக்கைக்காக மாநில அரசிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அந்த
நிலத்தை மறுசீரமைப்புச் செய்யத் தவறியதால் அந்த நிலத்தை
கையகப்படுத்துவதற்கு அல்லது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச்
செல்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கிள்ளான்
நகராண்மைக் கழகச் செயலாளர் ஜைரீஸால் அகமது ஜைனுடின்
கூறினார்.
அந்த நிலத்தை துப்புரவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நில
உரிமையாளர்களுக்கு 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் (சட்டம்
171) கீழ் வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசத்தை அவர்கள் மீறி
விட்டனர் என்று அவர் சொன்னார்.
அந்த குப்பைகளை அகற்றுவதற்கு தங்களுக்கு 10 லட்சம் வெள்ளி வரை
செலவு ஏற்படும் என்பதால் நகராண்மைக் கழகத்தின் உத்தரவை
தங்களால் நிறைவேற்ற இயலவில்லை என சம்பந்தப்பட்ட நில
உரிமையாளர்கள் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த பகுதியில் மொத்தம் 12 லோட் நிலங்கள் உள்ளன. இதுவரை நான்கு
லோட் உரிமையாளர்களை மட்டுமே நாங்கள் அடையாளம் கண்டு
நிலத்தை துப்புரவு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசத்தை
வழங்கியுள்ளோம் என்றார் அவர்.
இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விட்டது. அவை
தனியார் நிலங்கள் என்பதால் அதன் உரிமையாளர்கள்தான் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகராண்மைக் கழகம் அதனை செய்யாது என அவர் சொன்னார்.
காப்பார், 14வது மைலில் குப்பைக் கொட்டும் மையங்களாகச் செயல்படும்
நிலங்களை மாநில அரசு உடனடியாக கையகப்படுத்த முடியாது என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த டிசம்பர் 8ஆம் தேதி
கூறியிருந்தார்.
மாறாக, குப்பைகளை அகற்ற அவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம்
வழங்கப்பட்டு அதனை அவர்கள் நிறைவேற்றாத பட்சத்தில் மட்டுமே
அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் அவர்.




