ஷா ஆலம், டிச 15 - மாநில அரசின் பரிவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்
இலவச பற்றுச் சீட்டுகளை விரைந்து பெற்றுக் கொள்ளும்படி
இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த
குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் (எஸ்எம்.யு.இ. மற்றும் மாற்றுத்
திறனாளிகள் பரிவுத் திட்ட (எஸ்.எம்.ஐ.எஸ்.) பங்கேற்பாளர்கள்
இவ்வாண்டிற்கான இலவச பற்றுச் சீட்டுகளை இன்னும் பெறாத பட்சத்தில்
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தைத் தொடர்பு
கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கேட்டுக் கொண்டார்.
இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கான இறுதி நாள் இம்மாதம் 22ஆம்
தேதி என்பதால் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை முறையாகப்
பயன்படுத்தி பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்
கொண்டார்.
ஷா ஆலம், கெமுனிங் உத்தாமாவில் உள்ள தொகுதி சேவை மையம்
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி
வரையிலும் செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி
வரையிலும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி
வரையிலும் திறந்திருக்கும்.
உணவு இடைவேளைக்காகத் திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 12.30
மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை நண்பகல்
12.00 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும் அலுவலகம்
மூடப்பட்டிருக்கும்.




