ஷா ஆலம், டிச 15 - துரித வளரச்சி கண்டு வரும் சில துறைகளில்
கனடாவுடன் பங்காளித்துவத்தை அதிகரிக்க சிலாங்கூர் முயன்று
வருவதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் கூறியது.
அண்மையில் மலேசியாவுக்கான கனடா தூதர் மற்றும் மலேசியாவிலுள்ள
கனடிய வர்த்தக சபை பிரதிநிதிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட
சந்திப்பைத் தொடர்ந்து இந்த தகவலை மாநில அரசின் துணை
நிறுவனமான இன்வெஸ்ட் சிலாங்கூர் தனது எக்ஸ் பக்கத்தில்
வெளியிட்டுள்ளது.
இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமையிலான பேராளர் குழுவுக்கு முதலீட்டுத்
துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தலைமை
தாங்கிய வேளையில் கனடா பேராளர் குழுவுக்கு அந்நாட்டுத் தூதர்
வெய்னி ரோப்சன் தலைமையேற்றார்.
சிலாங்கூரில் வளர்ச்சி கண்டு வரும் துறைகளான வான் போக்குவரத்து,
உணவு பாதுகாப்பு இணைய பாதுகாப்பு, உயிரியல் தொழில்நுட்பம் குறித்து
விரிவாக எடுத்துரைப்பதற்குரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது என்று
இன்வெஸ்ட் சிலாங்கூர் குறிப்பிட்டது.
ஆக்ககரமான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. எதிர்கால
பங்காளித்துவத்திற்கு அடித்தளத்தை அமைத்துள்ளோம் என அது
தெரிவித்தது.
இவ்விரு தரப்புக்கும் இடையிலான சந்திப்பு சிலாங்கூர் மாநில அரசு
தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.




