ஷா ஆலம், டிச 12: அடுத்த ஆண்டு மத்தியில் 30,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் தாமான் செந்தோசா, நகர அந்தஸ்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிள்ளான் நகராண்மை கழகம் உடன் கலந்துரையாடல் செயல்முறை தொடர்ந்து நடந்து வருவதாக செந்தோசாவில் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
வணிக மையங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து உருவாக்கப் பட்டதாக டாக்டர் ஜி குணராஜ் தெரிவித்தார்.
"எம்பிகே மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு தாமான் செந்தோசாவின் நிலை நகரமாக மாறும். பிபிடி (PBT) அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
"அனைத்து துறைகளிடமிருந்தும் கருத்துகளைப் பெறுவது உட்பட, இந்த விஷயத்தைப் பிபிடி நிகழ்ச்சி நிரலில் கொண்டுவந்தால், ஆறு மாதங்களில் அதை முடிக்க முடியும் (நகர மேம்படுத்தல் நிலை). இது அவசரம் அல்ல, ஆனால், முக்கியமானது என்பதால் நான் கால அவகாசம் தருகிறேன்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார். .
இதற்கிடையில், 25 வீடமைப்பு களைக் கொண்ட தாமான் செந்தோசா நகர நிலை அடைந்தவுடன் சமூகத்தின் மனநிலையும் சிந்தனையும் மாறும் என்று அவர் நம்புகிறார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் வீடுகளின் விலை உயரும் மற்றும் வெள்ளப் பிரச்சனைகள் போன்றவைகளுக்கு தீர்வு காணவும், வசதியான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் உதவும் என அவர் எதிர்பார்க்கிறார்.
"நகர அந்தஸ்தை அடைய தாமான் செந்தோசா எப்போதும் சுத்தமாகவும் பசுமையாகவும் இருப்பதை உறுதி செய்வதில் குடியிருப்பாளர்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
செந்தோசா தொகுதியின் கீழ் பண்டார் பொத்தானிக், பண்டார் புக்கிட் திங்கி, பண்டார் புத்ரா மற்றும் பண்டார் புத்ரி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் தாமான் செந்தோசாவும் ஒன்றாகும்.




