ஷா ஆலம், நவ 30 - சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு
விற்பனை வரும் சனிக்கிழமை செகி ஃப்ரெஷ் பேராங்காடிகளின் நான்கு
கிளைகளில் நடத்தப்படும்.
கோழி, மீன், அரிசி உள்ளிட்ட சமையல் பொருள்களை மலிவான
விலையில் விற்பனை செய்யும் இந்த இயக்கம் காயு ஆரா, கென் ரிம்பா,
பண்டார் டெக்னோஜோஜி காஜாங் மற்றும் ஆரா டாமன்சாரா ஆகிய
நான்கு பேரங்காடிகளில் நடைபெறும்.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும்
மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர்
மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை
செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.
மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ்.
மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம்
செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த
மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.
சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை
செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக்
கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி
ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு
இதுவரை 4 கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனை
மூலம் சுமார் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.




