ஷா ஆலம், நவ 28- சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்தது 30 விழுக்காட்டு
வனப்பகுதியை நிலைநிறுத்துவதற்காக நீடித்த சுற்றுச்சூழலை உறுதி
செய்யும் நடவடிக்கையை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள
இத்திட்டதிற்கேற்ப 1 கோடியே 10 லட்சம் மரங்களை நடுவது மற்றும்
காடுகளைப் பராமரிப்பது ஆகிய நடவடிக்கைகள் மீது தீவிர கவனம்
செலுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
வனத்தைப் பாதுகாப்பது தொடர்பில் பள்ளிகளில் படங்கள், காணொளி
மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில்
விளக்கமளிக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் (சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா) தம்மிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் மாநில வன இலாகா மற்றும் மாநில அரசுடன்
இணைந்து மறுபடியும் செயல்திட்டத்தை வரையவிருக்கிறோம்.
காடுகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் மக்களின் விழிப்புணர்வை
அதிகரிப்பதில் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானவையாக
விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற காடுகள் சிலாங்கூர் அரச பாரம்பரியம் எனும்
பிரகடன நிகழ்வின் தொடக்க விழாவில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வை
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் தொடக்கி வைத்தார்.
முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அமிருடின், பல்லுயிர் பாதுகாப்பு
மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் தேசிய மற்றும் அனைத்துலக நிலையிலான கொள்கைகளை மாநில அரசு முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.




