ஷா ஆலம், நவ 28 - தாமான் புக்கிட் மேவா, ஜாலான் 19இல் மலைச்சரிவு
மற்றும் தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணிகள் மிகுந்த கவனத்துடன்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் இன்னும் நான்கு
மாதங்களில் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மலைச்சாரலின் மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்
பைலிங் எனப்படும் சிமெண்ட் தூண்களைப் பதிக்கும் பணியைத் தாம்
அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் காஜாங் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் சியோங் கியான் யோங் கூறினார்.
அந்த மலைச்சாரலின் மத்திய மற்றும் கீழ்ப்பகுதியில் பைலிங் வேலைகள்
ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டன. மேல் பகுதியில் இன்னும் இரு
வார காலத்தில் அப்பணி முழுமை பெறும் என அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் நகர்வை முடிந்த வரை
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் குத்தகையாளர் தீவிரமாக
ஈடுபட்டு வருவதாக அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.
அண்மையில் அப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 27 குடியிருப்புகள்
பாதிக்கப்பட்டதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் முன்னதாக கூறியிருந்தார்.




