SELANGOR

அரச குடும்பத்திற்கான நிதி அதிகரிப்பு அரச இறையாண்மையை காக்க அவசியமானது- மந்திரி புசார்

23 நவம்பர் 2023, 5:56 AM
அரச குடும்பத்திற்கான நிதி அதிகரிப்பு அரச இறையாண்மையை காக்க அவசியமானது- மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 23 – சிலாங்கூர் அரச குடும்பத்தின் செலவுகளை ஈடு செய்வதற்கும் இறையாண்மையைப் பேணிக் காப்பதற்கும் போதுமான நிதி மற்றும் வளங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று சட்டமன்றத்தில் விளக்கினார்.

இந்த நிதி அரச குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமின்றி இன்றைய  வெளிப்படையான மற்றும் கட்டுப்பாடற்ற தகவல் தொடர்பு மற்றும் ஊடகங்களின்  யுகத்தில் முறையான தகவல் தொடர்பு சாதன உருவாக்கத்திற்கும்  அவசியமாகிறது  என்றார்.

இலக்கவியல் மற்றும் சமூக ஊடக தளங்கள் பரவலாக இருக்கும் யுகத்தில் அரச குடும்பத்தின் இறையாண்மை மற்றும் கெளரவத்தைப் பாதுகாக்க அதிகாரப்பூர்வத் தகவல்தொடர்பு சாதனங்கள் இன்றியமையாதவை என்று அவர் கூறினார்.

மேன்மை தங்கிய ஆட்சியாளர் (சிலாங்கூர் சுல்தான்) தனது சொந்த சமூக ஊடக கணக்கு உட்பட பல நிறுவனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களை நிறுவியுள்ளார்.  கடந்த ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பு இவ்வாறு செய்யப்படவில்லை.

எனவே, அவதூறு போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் மாநில ஆட்சியாளரின் பங்கைக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலளிப்பதற்கும் இந்த கூடுதல் ஒதுக்கீடுகள் அவசியம்.

நான் எந்த குறிப்பிட்ட தரப்பினரையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால் சில தரப்பினரிடையே இத்தகைய போக்குகள் காணப்படுகின்றன. இருப்பினும், இளைய தலைமுறையினரைப் பாதுகாத்து நற்போதனைகளை ஊட்டுவது தலைவர்களாகிய நமது பொறுப்பு என்றார் அவர்.

அவர்கள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் பக்கம் அதிகமாக ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது. மாறாக, சமூக கட்டமைப்பையும் கூட்டரசு அரசியலமைப்பையும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று  2023ஆம் ஆண்டிற்கான அரச ஒதுக்கீட்டுச் சட்ட மசோதா (திருத்தம்) மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

மாநில அரச குடும்பத்திற்கான ஒதுக்கீடுகளின் அதிகரிப்பை மந்திரி புசார் சட்டமன்றத்தில் விரிவாக  விவரித்தார்.

திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், வகுப்பு III இன் கீழ் செய்யப்படும் ஒதுக்கீடு 72 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியிலிருந்து  76 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியாக   உயர்த்தப்படும் என்றார். இந்த அதிகரிப்பு  அரச குடும்பத்தின் ஊழியர்களுக்கான ஊதியத்தை பிரதான நோக்கமாகக் கொண்டது.

வகுப்பு IV இன் கீழ் செய்யப்படும் ஒதுக்கீடு, ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் உபகரணங்களை மாற்றுவது ஆகிய நோக்கங்களுக்கானது. இந்த ஒதுக்கீடும்  1 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியிலிருந்து  1 கோடியே 70 லட்சத்து 10 1 ஆயிரம் வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது என அமிருடின் சொன்னார்.

இந்த மசோதா மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி உட்பட அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.