ஷா ஆலம், நவ 22- மாநிலத்தில் நிதி நிலைமை குறிப்பாக அவசர
காலங்களில் சீராக இருப்பதை உறுதி செய்ய மாநிலம் குறைந்தது மூன்று
மாத வருமானத்தை கையிருப்பாக வைத்திருப்பது அவசியமாகும் என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கும் திட்டங்களை
மேற்கொள்வதற்கும் ஒவ்வோராண்டும் இந்த நிதிக் கையிருப்பு
தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
ஒவ்வோராண்டும் நமக்கு குறைந்தது மூன்று மாதத்திற்கான நிதிக்
கையிருப்பு தேவைப்படுகிறது. இதன் மூலம் சம்பளம் வழங்குவது போன்ற
பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான விநியோக
மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில்
சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் பேரிடர் அல்லது பெருந்தொற்று ஏற்படாத
போதிலும் மாநிலத்தின் கையிருப்பில் இருந்த நிதி பெருமளவு
செலவிடப்பட்டதாகவும் அமிருடின் குற்றஞ்சாட்டினார்.
நிதிக் கையிருப்பை தாம் தொடர்ந்து செலவிட்டு வந்தால் 2023ஆம்
ஆண்டில் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு முற்றாக காலியாகியிருக்கும்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் மேம்பாட்டுத திட்டங்களை
மேற்கொள்ளவும் போதுமான நிதி கைவசம் இருக்காது என்றார் அவர்.
கடந்த 2015ஆம் ஆண்டில் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 325 கோடியே 80
லட்சம் வெள்ளியாக இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் அதாவது மூன்று
ஆண்டுகளுக்குப் பின்னர் அத்தொகை 112 கோடியே 30 லட்சம் வெள்ளி
குறைந்து 213 கோடியே 50 லட்சம் வெள்ளியாக ஆனது என அவர்
சொன்னார்.
மாநில அரசின் நிதிக் கையிருப்பு என்பது அடுத்து தலைமுறைக்கு நாம்
விட்டுச செல்லும் செல்வமாகும். அந்நிதி அவசரத் தேவைகளுக்கு உதவும்.
எந்தவொரு எதிர்காலத் திட்டமும் இன்றி ஜனரஞ்சக நோக்கங்களுக்காக
செலவிடுவதற்கான நிதி அது அல்ல என்றார் அவர்.




