SELANGOR

நிறைவு பெறாத வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைந்து முடிப்பீர்- கோத்தா கெமுனிங் உறுப்பினர் பிரகாஷ் வலியுறுத்து

17 நவம்பர் 2023, 7:43 AM
நிறைவு பெறாத வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைந்து முடிப்பீர்- கோத்தா கெமுனிங் உறுப்பினர் பிரகாஷ் வலியுறுத்து

ஷா ஆலம், நவ 17- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் இன்னும் முழுமை பெறாமலிருக்கும் பல வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக கோத்தா கெமுனிங் தொகுதியும் ஒன்றாக விளங்குவதால் இப்பகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.

வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக தாமான் ஸ்ரீ மூடாவில் இரு நீர் இறைப்பு பம்ப் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை உட்படுத்திய ஷா ஆலம் வெள்ள நடவடிக்கை பெருந்திட்டம் (சுசுட்) மற்றும் புக்கிட் லஞ்சோங், தாமான் புக்கிட் கெமுனிங்கில் நீர் இறைப்பு பம்ப் கருவிகள் மேம்படுத்துவது, கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்துவது உள்பட பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் மாநில அரசுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

அதே வேளையில், தொடக்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்  இன்னும் நிறைவு பெறாமலிருப்பதற்கான காரணத்தையும் நான் அறிய விரும்புகிறேன்.

அத்திட்டங்களில் ஒன்றான 25/14 ஜாலான் ஸ்ரீகாண்டியில் மூன்று நீர் இறைப்பு பம்ப்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் மின்சார இணைப்பு இல்லாத காரணத்தால் அவை செயல்பட முடியவில்லை.

இரண்டாவதாக, ஸ்ரீ மூடா, ஜாலான் பெர்சியாரான் அமானில் அல்-தக்வா சூராவ் அருகிலும்  ஜாலான் பெர்சியாரான புடிமானிலும் வெள்ளத் தடுப்பு பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. மூன்றாவதாக தாமான் புக்கிட் கெமுனிங் மற்றும் புக்கிட் லஞ்சோங்கில் வெள்ளத் தடுப்பு மதகில் பம்ப் கருவிகள் பொருத்தப்பட்ட போதிலும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை.

நான்காவதாக, கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியை ஊராட்சி மன்றங்களும் வடிகால் மற்றும் நீரபாசனத் துறையும் முறையாக மேற்கொள்ளாத காரணத்தால் புக்கிட் கெமுனிங் லோட் நிலங்கள் மற்றும் இண்டா ரெசிடன்ஸ் பகுதியில் உள்ள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு நீரோட்டம் தடை பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

வெள்ளம் என்பது சாதாரண விஷயமல்ல. அது உயர்களைப் பறித்து, சொத்துகளை அழித்து மாநிலம் மற்றும் நாட்டின் பொருளதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மழை காலம் தொடங்கும்போதெல்லாம் சிலாங்கூர் மக்கள் வெள்ள அபாயம் குறித்த அச்சத்தில் எந்நேரமும் இருக்கும் நிலை இனியும் தொடரக்கூடாது என மாநில சட்டமன்றத்தில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.