ஷா ஆலம், நவ 17 : 2021ல் வெள்ளம் காரணமாகக் கடுமையான சேதத்தைச் சந்தித்த டூசுன் துவா தொகுதியைச் சுற்றியுள்ள பொது மற்றும் சுற்றுலா வசதிகள் மீது கவனம் தேவை.
இத்தொகுதியில் வருகையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்ட பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் இருப்பதால், மாநிலத்தின் பொருளாதாரத்தை இயக்கும் வகையில் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான் அப்துட் அஜீஸ் கூறினார்.
சட்ட மசோதா 2024 பற்றி விவாதித்த அவர், பெரும்பாலான பகுதிகளும் பழையபடி செயல்படவில்லை, இதனால் வணிகர்களின் வருமானம் பாதிக்கப்படும் என்றார்.
சுங்கை மங்கீஸ், சுங்கை லோபோ, சுங்கை சொங்காக், சுங்கை செமுங்கிஸ் மற்றும் சுங்கை கபாய் நீர்வீழ்ச்சி ஆகியவை உடனடியாக பராமரிக்கப்பட வேண்டிய இடங்களாகும் என்று அவர் விளக்கினார்.
"வார இறுதி நாட்களிலும், பள்ளி விடுமுறை நாட்களிலும், பண்டிகைக் காலங்களிலும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
"இப்பகுதியை வணிகமயமாக்கவும், கிராமப்புற சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தவும் உதவும் சுற்றுலா மற்றும் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநில அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
2021 டிசம்பர் 17 மற்றும் 19க்கு இடையில் வழக்கத்திற்கு மாறான கனமழை காரணமாக மாநிலத்தில் பல இடங்கள் மூழ்கின. அதில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் டூசுன் துவாவும் ஒன்றாகும்.
வெள்ளித்தைத் தொடர்ந்து சுமார் RM1.4 பில்லியன் இழப்பை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மதிப்பிட்டார். இதில் உள்கட்டமைப்பை சரிசெய்வதற்கான செலவு சுமார் RM400 மில்லியன் ஆகும்.




