SELANGOR

மக்கள் அதிகம் உள்ள நான்கு பகுதிகளில் டிரான்சிட் வேன் சேவை

14 நவம்பர் 2023, 8:52 AM
மக்கள் அதிகம் உள்ள நான்கு பகுதிகளில் டிரான்சிட் வேன் சேவை

ஷா ஆலம், நவ 14 - ஆன் டிமாண்ட் டிரான்சிட் (டி.ஆர்.டி.)  எனப்படும் பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்ட வேன் சேவை நவம்பர் 20 முதல் நான்கு அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகள் மற்றும் குறுகிய வழித்தடங்கள் உள்ள இடங்களில் செயல்படும் என்று போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு  தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவையை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக விளங்கும் இந்த முன்னோடித் திட்டம்  பூச்சோங், பண்டார் உத்தாமா, அம்பாங் மற்றும் சுபாங் ஜெயா ஆகிய இடங்களில்  ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

டி.ஆர்.டி. சேவையைப் பயன்படுத்துவதற்கு 2.00 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்ட அமலாக்கத்திற்கு தேவைப்படும் கூடுதல் செலவினத்தை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த டி ஆர்.டி.  முறை விவேக மென்பொருளால் இயக்கப்படுகிறது. இது வெவ்வேறு இடங்களிலிருந்து பயணிகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதை உறுதிப்படுத்துகிறது.

பொது போக்குவரத்து அமைப்பின் முதல் மற்றும் கடைசி மைல்களை பூர்த்தி செய்வதற்காக ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய பொது போக்குவரத்துக்கு அருகில் உள்ள இடங்களில் கவனம் செலுத்துவதே இதன் இலக்கு என்று அவர் இன்று கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில்  புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ராஜீவ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த  டி.ஆர்.டி. சேவை வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் எட்டு கூடுதல் மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.

இந்தச் சேவை தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் பயனீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளைப் பயன்படுத்தும்  என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.