ஷா ஆலம், நவ 8 - தீபாவளியை முன்னிட்டு இலவச பற்றுச் சீட்டுகளை வழங்கும் நிகழ்வு இம்மாதம் 5ஆம் தேதி இங்குள்ள செக்சன் 13, ஜெயண்ட் பேரங்காடியில் நடைபெற்றது. பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இப்பேரங்காடியில் வாங்கிக் கொண்டனர்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு கோத்தா அங்கிரிக் தொகுதியைச்
சேர்ந்த 296 பேர் தலா 200 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகளைப்
பெற்றுக் கொண்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது நஜ்வான்
ஹலிமி கூறினார்.
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள்
எதிர்நோக்கும் சிரமத்தை மாநில அரசின் இந்த இலவசப் பற்றுச் சீட்டுத்
திட்டம் ஓரளவு குறைக்கும் எனத் தாம் நம்புவதாக இளைஞர்,
விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான
மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்த பெருநாள் கால இலவசப் பற்றுச் சீட்டுத் திட்டத்திற்கு மாநில அரசு
100 வெள்ளியை ஒதுக்கி வந்த நிலையில் தற்போதைய வாழ்க்கைச்
செலவின அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு தொடங்கி அதன்
மதிப்பை 200 வெள்ளியாக உயர்த்தியுள்ளது.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு மாநிலத்திலுள்ள அனைத்து 56
சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வசதி குறைந்த 22,000 குடும்பங்களுக்கு
இந்த பற்றுச் சீட்டுகளை வழங்க மாநில அரசு 44 லட்சம் வெள்ளியைச்
செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அண்மையில் கூறியிருந்தார்.




