ஷா ஆலம், நவ 1- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு மாநிலத்திலுள்ள 22,000 வசதி குறைந்த
குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த பெருநாள் கால ஷோம் ஷோப்பிங் திட்டத்தை அமல்படுத்துவதற்கு
மாநில அரசு 44 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதில் மட்டுமின்றி
மக்களின் நல்வாழ்விலும் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளதை இந்த
பற்றுச் சீட்டு திட்டம் புலப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
முக்கியப் பண்டிகை காலங்களில் வசதி குறைந்தவர்களும் பெருநாளை
மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசு
200 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளை தகுதி உள்ள குடும்பங்களுக்கு
வழங்கி வருகிறது.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 22,000 பேருக்கு தலா 200
வெள்ளி பற்றுச் சீட்டுகளை வழங்க 44 லட்சம் வெள்ளியை மாநில அரசு
ஒதுக்கியுள்ளது என அமிருடின் தெரிவித்தார்.
மக்களின் நல்வாழ்வு மற்றும் சுபிட்சத்தை பேணிக்காக்கும் நீண்ட காலத்
திட்டமாக வசதி குறைந்த தரப்பினரை இலக்காகக் கொண்டு மாநில அரசு
இந்த பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்தை அமல்படுத்தி
வருகிறது.
ஐ.எஸ்.பி. எனப்படும் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங்
முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள இந்த திட்டத்தின் வாயிலாக நோன்புப்
பெருநாள், சீனப்புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகையின் போது வசதி
குறைந்தவர்களுக்கு இலவசப் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.








