ஷா ஆலம், நவ 1- சிலாங்கூர் மாநில அரசு 2024-2028 பராமரிப்பு
பொருளாதார செயல் திட்டத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம்
தொடங்கவுள்ளது. இது பராமரிப்பு பொருளாதாரம் தொடர்பான
விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு குறிப்பு
ஆவணமாக விளங்கும்.
அடுத்த ஆறு மாத காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம்
ஐந்தாண்டுக் கொள்கையை உள்ளடக்கிய நாட்டின் முதலாவது திட்டமாக
விளங்கும்.
அதே சமயம், அடுத்தாண்டு ஜூன் மாதம் சிலாங்கூர் பராமரிப்பு
பொருளாதார நடவடிக்கை மன்றத்தை மாநில அரசு அமைக்கவுள்ளதாக
மகளிர் திறன் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்கவுள்ள இந்த
மன்றம் பராமரிப்பு செயல்திட்டம் தொடர்பான திட்டமிடல், கண்காணிப்பு,
மற்றும் தேவையான உள்ளடக்கங்களை வழங்குவதற்குரிய களமாக
விளங்கும் என்று அவர் சொன்னார்.
இந்த செயல் திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு சமூகத்தின் நான்கு
முக்கிய அங்கங்களாக விளங்கும் அரசாங்கம், தனியார் துறை, குடும்பம்
மற்றும் சமூகத்தின் வசம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடிப்படை வசதிகள், சமூக பாதுகாப்பு கொள்கைகள், பொறுப்புகளை
பகிர்வது ஆகியவற்றின் வாயிலாகப் பராமரிப்புத் துறையை அங்கீகரிப்பதை
நோக்கமாக கொண்ட நிலையான மேம்பாட்டு இலக்கிற்கேற்ப இது
அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
நேற்று முடிவுக்கு வந்த இரண்டு நாள் 2023 சிலாங்கூர் பராமரிப்பு
பொருளாதார ஆய்வரங்கையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர்
இதனைக் கூறினார்.
இந்த ஆய்வரங்கில் உயர்கல்விக் கூடங்கள், அரசு துறைகள், சங்கங்கள்,
ஊராட்சி மன்றங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 100
பேராளர்கள் கலந்து கொண்டனர்.








