கிள்ளான், அக் 31- இன்று இங்கு நடைபெற்ற மேரு சட்டமன்றத் தொகுதி
நிலையிலான மலிவு விற்பனைக்கு மாற்றுத் திறனாளியான தன் நண்பரை
மேரு குடியிருப்பாளர் ஒருவர் அழைத்து வந்தார்.
அண்டை வீட்டுக்காரரான அந்த மாற்றுத் திறனாளி வாங்கிய கோழி,
முட்டை, அரிசி ஆகிய பொருள்களுக்கான 33.00 வெள்ளியை முகமது
ஜூல்ஹெல்மி முகமது ஸபார் (வயது 32) என்ற அந்நபரே செலுத்தினார்.
மலிவான விலையில் பொருள்களை வாங்க விரும்பிய தன் அண்டை
வீட்டுக்காரரை தாம் இங்கு அழைத்து வந்ததாக ஜூல்ஹெல்மி கூறினார்.
இரண்டாவது முறையாக நான் இந்த மலிவு விற்பனைக்கு வருகிறேன்.
இம்முறை என் அண்டை வீட்டுக்காரரையும் அழைத்து வந்தேன் என்று
அவர் தெரிவித்தார்.
தரமான பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் இந்த
ஏஹ்சான் ரஹ்மா திட்டம் அனைத்து நிலையிலான மக்களுக்கும் பெரிதும்
துணை புரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மற்ற இடங்களைக் காட்டிலும் இந்த ஏஹ்சான் ரஹ்மா திட்டத்தில்
பொருள்கள் மிகவும் மலிவான விலையில் விற்கப்படுகின்றன என்று அவர்
சொன்னார்.
இந்த மலிவு விற்பனையில் நான் கோழி, முட்டை மற்றும் அரிசியை
வாங்கினேன். பொருள் விலையேற்றம் கண்டு வரும் இவ்வேளையில்
இந்த மூன்று பொருள்களும் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன
என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இத்தகைய மலிவு விற்பனைகளின் வாயிலாக அன்றாட
செலவினத்தை கட்டுப்படுத்த முடிவதாக ஜெமாலி தம்பா (வயது 64)
கூறினார்.
நான் இதற்கு முன்னர் இங்கு பொருள்களை வாங்கியதில்லை. இங்கு 5
கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் கோழி 10.00 வெள்ளிக்கும்
விற்கப்படுவதை அறிந்து வியப்படைந்தேன். மக்கள் ஏன் நீண்ட
வரிசையில் காத்திருக்கிறார்கள் என்ற காரணமும் இப்போதுதான் புரிந்தது
என்றார் அவர்.








