ஷா ஆலம், அக் 30: பொதுமக்கள் மின் சாதனங்களை அகற்றுவதற்கு வசதியாகப் பண்டார் உத்தாமா, பெட்டாலிங்கில் மூன்று எரிவாயு நிலையங்களில் மின்னணு கழிவுகளை அகற்றும் கியோஸ்க்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் ``பிஎச்பி பெட்ரோல்`` மற்றும் ``பெட்ரோனாஸ்`` நிலையங்களுடன் இணைந்து இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார். இத்திட்டத்தை மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதற்கு இது ஒரு முன்னோடித் திட்டமாக இருக்கும்.
"இந்த கியோஸ்க் மூலம் எளிதாக மின்னணு கழிவுகளை அகற்றலாம். ஆனால், பேட்டரிகள், கைப்பேசிகள் , கூடுதல் பேட்டரி சார்ஜர்கள் போன்ற சாதனங்கள் சிறியதாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
மேலும், தனது தரப்பு சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
"அனைத்து இடங்களிலும் இந்த கியோஸ்க்கை நிறுத்த முடியாது என்பதால், நிலையங்களின் இருப்பிடத்தின் பொருத்தத்தையும் நாங்கள் பார்க்கிறோம். எனவே, முன்னோடித் திட்டம் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுத்தப்படும். இதற்கு அதிகமான எரிவாயு நிலையங்கள் ஒத்துழைக்க வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.








