ஷா ஆலம், அக் 30 - நேற்று இங்கு பெய்த கன பலத்தக் காற்றுடன் கூடிய
கன மழை காரணமாக தாமான் ஸ்ரீ மூடா உள்பட கோத்தா கெமுனிங்
தொகுதியின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
நேற்று மாலை சுமார் 3.00 மணி தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு
நீடித்த மழையைத் தொடர்ந்து ஸ்ரீ மூடா மட்டுமின்றி செக்சன் 31 மற்றும்
32, புக்கிட் கெமுனிங், புத்ரா ஹைட்ஸ், கம்போங் பாரு ஹைக்கோம்
ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பு பகுதிக்கு விரைந்த தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன், ஷா ஆலம் மாநகர் மன்ற
உறுப்பினர் ராமு நடராஜன் உதவியுடன் உரிய நிவாரண நடவடிக்கைகளை
மேற்கொண்டார்.
இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள மதகில் நீர் மட்டத்தை ஆய்வு செய்த
அவர், அங்குள்ள நீர் இறைப்பு இயந்திரங்கள் மூலம் வெள்ள நீர்
வெளியேற்றப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
பின்னர் அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று
பார்வையிட்டத்தோடு அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும்
வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் மாதம் தொடங்கி கன மழை
பெய்யும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஷா ஆலம் மாநகர் மன்றம்
மற்றும் வடிகால் மற்றும் நீர் பாசனத்துறையின் ஒத்துழைப்புடன் தொகுதி
சேவை மையம் பல்வெறு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தாமான்ஸ்ரீ மூடா பகுதியில் கால்வாய்களைத் துப்புரவு
செய்யும் பணி தினசரி மேற்கொள்ளப்படுவதாக மாநகர் மன்ற உறுப்பினர்
ராமு கூறினார்.
நடப்பு வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு கால்வாய்களில்
குப்பைகைளை வீசுவது நீரோட்டத்தைத் தடுக்கக்கூடிய செயல்களைப்
புரிவதை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.








