கோம்பாக், அக் 30- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு சுங்கை துவா தொகுதியில் உள்ள வசதி
குறைந்த 400 பேருக்கு தலா 200 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகள்
விநியோகிக்கப்பட்டன.
இந்த பற்றுச் சீட்டின் மதிப்பு 100 வெள்ளியிலிருந்து 200 வெள்ளியாக
உயர்த்தப்பட்டது இந்திய சமூகம் மீது மாநில அரசு கொண்டுள்ள பரிவைக்
காட்டுகிறது என்று பத்து கேவ்ஸ் இந்திய சமூக நல மற்றும் மேம்பாட்டுச்
சங்கத்தின் தலைவர் பி.விக்னேஸ்வரன் கூறினார்.
கடந்தாண்டு வரை இந்த பற்றுச் சீட்டின் மதிப்பு 100 வெள்ளியாக மட்டுமே
இருந்தது. இவ்வாண்டில் அது 200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன
வேறுபாடின்றி அனைத்து மக்களின் மீதான மாநில அரசின் அக்கறையின்
வெளிப்பாடாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய உதவிகளை வழங்கி வரும் மாநில அரசுக்கு இந்திய சமூக
நன்றிக் கடன் பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும் இத்திட்டம் தொடரும்
என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.
இங்குள்ள செலாயாங் பாரு, ஸ்ரீ தெர்னாக் பேரங்காடியில் நடைபெற்ற
நிகழ்வில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்திய
குடும்பங்களுக்கு தீபாவளி இலவசப் பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.
நாட்டின் முக்கிய பெருநாள்களின் போது வசதி குறைந்தவர்களின்
சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த பெருநாள் காலப் பற்றுச் சீட்டு
வழங்கப்படுகிறது. 100 வெள்ளியாக இருந்த பற்றுச்சீட்டின் மதிப்பு
இவ்வாண்டு முதல் 200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐந்தாவது ஆண்டாக இந்த பற்றுச் சீட்டைப் பெறுவதற்கு
தாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவன ஊழியரான திருமதி
கே.பிரேமா (வயது 46) கூறினார்.
இந்த பற்றுச் சீட்டைக் கொண்டு தீபாவளிக்குத் தேவையான பொருள்களை
வாங்கவிருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பற்றுச் சீட்டை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட
பாதுகாவலரான என். நாதன் (வயது 34) இதன் மூலம் அத்தியாவசியப்
பொருள்களை வாங்குவதற்கும் தீபாவளி செலவுக்கான தொகையில்
ஓரளவு மிச்சப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.








