கோம்பாக், அக் 30: மேம்பாட்டிலும் சமூக நல உதவித் திட்டங்களிலும்
எந்த இனமும் புறக்கணிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும் தனது
கடப்பாட்டை மாநில அரசு மறுவுறுதிப்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து இனங்களும் சமமாக
நடத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
குழப்பங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த முயலும் பொறுப்பற்றத்
தரப்பினர் சதி வலையில் வீழ்ந்துவிட வேண்டாம் என்று மாநில மக்களை
அவர் கேட்டுக் கொண்டார்.
நம்மை பிரிக்க முயலும் இனவாதத் தூண்டுதல்களுக்கு ஆட்பட
வேண்டாம். சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆட்பட்டால் நாம்
முன்னேற முடியாமல் போய் விடும் என்பதோடு வெளியாட்களும் நம்மை
எளிதில் ஆட்கொண்டு விடுவர் என்று அவர் எச்சரித்தார்.
தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு இங்குள்ள செலாயாங
பாரு, ஸ்ரீ லைஃப்ஸ்டோக் பேராங்காடியில் ஷோம் ஷோப்பிங் பற்றுச்
சீட்டுகளை விநியோகிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
இதனைத் தெரிவித்தார்.
பெருநாள் காலத்தில் பண்டிகையைக் கொண்டாடுவதில் வசதி குறைந்த
பி40 தரப்பினர் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கிலான இந்த
திட்டத்தின் கீழ் சுங்கை துவா தொகுதிக்கு 400 பற்றுச் சீட்டுகள்
ஒதுக்கப்பட்டன.








