ஷா ஆலம், அக் 25 - கடந்த மாத இறுதி நிலவரப்படி கிள்ளானில்
வறுமையில் வாடும் 3,544 குடும்பங்கள் எஞ்சியுள்ளதாக ஊராட்சி மன்ற
மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
பிரதமர் துறையின் கீழுள்ள அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவின் இ காசே
திட்டத்திலிருந்து இந்த தரவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மக்களவையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ்
எழுப்பிய எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
கூறினார்.
கிள்ளானிலும் நாடு முழுவதிலும் வறுமை நிலையிலுள்ளவர்களின்
எண்ணிக்கை மற்றும் இந்த வறுமைப் பிரச்சனைக்குத் தீர்வு காண
அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கணபதிராவ்
கேள்வியெழுப்பியிருந்தார்.
நாடு முழுவதும் வறுமை நிலையிலுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து
அமைச்சர் தனது பதிலில் தெரிவிக்கவில்லை. எனினும், இந்நாட்டில் பரம
ஏழ்மை நிலைக்கு இவ்வாண்டு இறுதிக்குள் தீர்வு காண அரசாங்கம்
கடப்பாடு கொண்டுள்ளதாகச் சொன்னார்.
ஏழ்மையை ஒழிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அளித்துள்ள வாக்குறுதி மற்றும் 12வது மலேசியத் திட்டத்தின் மத்திய
தவணைக்கான மறுஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள இதற்கான திட்டம்
ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வாக்குறுதியை தாம் வழங்குவதாக
அவர் குறிப்பிட்டார்.
தொழில்முனைவோர் பயிற்சிகள், கல்வி வாய்ப்பு மற்றும் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவது ஆகிய அம்சங்கள் மீது தனது அமைச்சு கவனம்
செலுத்துவதாக ஙா கூறினார்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி பொருளாதார அமைச்சர் அறிமுகப்படுத்திய
ஐ.பி.ஆர். எனப்படும் மக்கள் வருமான முன்னெடுப்பும் இந்த
அணுகுமுறையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் மேலும்
தெரிவித்தார்.








