கோலாலம்பூர், அக் 19- சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (சிப்ஸ்) முதல் நாளான இன்று 120 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டுப் பரிவர்த்தனைப் பதிவு செய்யப்பட்டது.
இம்மாநாட்டின் இரு தினங்களில் நிரணயிக்கப்பட்ட இலக்கான 150 கோடி வெள்ளி பரிவர்த்தனையை மாநாட்டின் ஏற்பாட்டாளரான இன்வெஸ்ட் சிலாங்கூர் அடைந்து விடும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்தார்.
இன்று காலை கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் நாம் 120 கோடி வெள்ளி மதிப்புள்ள வர்த்தக கடப்பாடுகளைப் பதிவு செய்துள்ளோம்.
இரு தினங்களில் ( நாளை வரை) நமது இலக்கு முழுமையாகப் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கிறோம். ஒரு கண்காட்சியுடன் தொடங்கிய இந்த மாநாடு இன்று விரிவாக்கம் கண்டு ஏகோபித்த ஆதரவையும் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இந்த மாநாட்டு கண்காட்சிக்கூடங்களை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, அனைத்துலக நிலையிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசு சிப்பாங்கில் மாநாட்டு மையம் ஒன்றை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெரிய அளவிலான மாநாடுகளை நடத்துவதற்குத் தேவையான மையங்கள் இல்லாதக் காரணத்தால் சிப்ஸ் போன்ற மாநாடுகளை நடத்தும்போது பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








