ஷா ஆலம், அக் 19- சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் கண்ணியமற்ற மற்றும் அநாகரீக வார்த்தைகளால் சிதைக்கப்படாமல் நெறிமுறைகளுக்கேற்பவும் விதிகளின்படி நடைபெற வேண்டும் என மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
நாகரீகமற்றவை எனக் கருதக்கூடிய நடத்தையால் அவையின் நடவடிக்கைகள் சிதைக்கப்படக்கூடாது என்றும் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நினைவுபடுத்தியதாகச் சிலாங்கூர் அரச அலுவலகம் இன்று முகநூலில் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் புதிய சபாநாயகர் லாவ் வெங் சானை நேற்று இஸ்தானா புக்கிட் கயாங்கானில் சந்தித்தப் பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
சட்டசபை நடவடிக்கைகளை நியாயமாகவும், சுமூகமாகவும் பாரபட்சமின்றியும் கையாள்வதில் முந்தைய சபாநாயகரின் பணியை வெங் சான் தொடர வேண்டும் என்றும் சுல்தான் ஷராபுடின் உத்தரவிட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஜசெக சார்பில் நியமிக்கப்பட்டிருந்த சபாநாயகர்கள் ஒவ்வொரு முறையும் அவைக் கூட்டத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காக மேன்மை தங்கிய சுல்தான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் தேதி மாநில சட்டமன்றக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படும் என்று வெங் சான் நேற்று தெரிவித்தார் .








