ஷா ஆலம், அக் 18- இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை
நடைபெறவிருக்கும் சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக மாநாடு,
முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய மற்றும் ஆசியானின் நுழைவாயிலாக
மாநிலத்தை பிரபலப்படுத்தக் கூடியத் தளமாக விளங்கும்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில்
மின்சாரம், மின்னணு, ஆயுள் அறிவியல், உணவு மற்றும் பான உற்பத்தி,
இலக்கவியல் முதலீடு மற்றும் சரக்கு பட்டுவாடா ஆகிய ஏழு
துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த சிப்ஸ் மாநாட்டின் வாயிலாக 150 கோடி வெள்ளி மதிப்பிலான
வர்த்தகத்தைப் பதிவு செய்ய முடியும் எனத் தாங்கள் நம்புவதாக முதலீடு
மற்றும் வர்த்தக துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான்
கூறினார்.
இம்முறை நடைபெறும் இந்த மாநாட்டில் 50,000 பேர் வரை கலந்து
கொள்ளக்கூடும் என்பதோடு 1,000 காட்சிக்கூடங்களுக்கும் ஏற்பாடு
செய்யப்படும். இது தவிர, 60 நாடுகளிலிருந்து பேராளர்கள்,
பார்வையாளர்கள் மற்றும் பேச்சாளர்களும் இம்மாநாட்டில் கலந்து
கொள்ளவுள்ளனர் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டு வர்த்தக நடவடிக்கைகள்
பழையபடி உயிர்ப்புடன் செயல்படுவதால் இந்த மாநாட்டில் கலந்து
கொள்வோரின் எண்ணிக்கையும் கடந்தாண்டைப் போலவே இருக்கும் என
நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
கடந்தாண்டில் இந்த வர்த்த மாநாட்டின் மூலம் 145 கோடி வெள்ளி வர்த்தக
மதிப்பு பதிவு செய்யப்பட்ட வேளையில் இம்முறை 150 கோடி வெள்ளியாக
அதனை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.








