ஷா ஆலம், அக் 12: சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ)
மேற்கொண்ட மேம்பாட்டு பணிகளால் பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் மறுசீரமைப்பு 52.2
சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் உலு லங்காட்டில் மதியம் 12 மணி நிலவரப்படி
முழுமையாகச் சீரமைக்கப்பட்டது.
பெட்டாலிங் மற்றும் கோலாலம்பூர் பகுதிகள் உள்ளிட்ட இன்னும் பாதிக்கப்பட்ட
பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை காலை 6 மணிக்கு முழுமையாகச்
சீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்தது.
நீர் விநியோகத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும்
இறுதிச் சடங்குகள் போன்ற முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
``தவிர்க்க முடியாத தொழில்நுட்ப சிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க நாங்கள்
அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம், இருப்பினும், சுத்தமான மற்றும்
பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நுகர்வோருக்கு விநியோகிப்பதை
உறுதிப்படுத்த மீட்பு காலம் நீட்டிக்கப்பட வேண்டும்,``என்று நிறுவனம் முகநூலில்
தெரிவித்துள்ளது.
இந்த முழு மறுசீரமைப்பு தாமதம் காரணமாகப் பயனர்களுக்கு ஏதேனும் அசௌகரியம்
ஏற்பட்டால் ஆயர் சிலாங்கூர் மன்னிப்புக் கோருகிறது.
"இப்போது எங்கள் கவனம் நீர் விநியோக மறுசீரமைப்பு செயல்முறை சீராக
நடைபெறுவதை உறுதி செய்வதாகும்,`` என்று தெரிவிக்கப்பட்டது.
பயனர்கள், ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலம்
திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம்
அல்லது ஆயர் சிலாங்கூரை 15300 என்ற எண்ணில் அழைக்கலாம்.








