SELANGOR

முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 15 பேருக்கு தலா வெ.10,000 அபராதம்

12 அக்டோபர் 2023, 2:08 AM
முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 15 பேருக்கு தலா வெ.10,000 அபராதம்

பெந்தோங், அக் 12- சிங்கப்பூரில்  உள்ளவர்களை  குறிவைத்து இல்லாத முதலீட்டுத் திட்ட  மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட 15 பேருக்கும் தலா 10,000 வெள்ளி அபராதம் விதித்து இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

பதினேழு முதல் 31 வயதுக்குட்பட்ட அவர்கள்  அனைவரும் அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மாஜிஸ்திரேட் நாட்ராத்துன் நாயீம் ஜைனன் உத்தரவிட்டார்.

கடந்த அக்டோபர் மாதம்  5 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை  கெந்திங் ஹைலண்ட்ஸில் உள்ள ஒரு வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கூடுதல் பட்சம் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 120 பி (2) பிரிவின் கீழ் அவரகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

.

இந்தக் கும்பலின்  அழைப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்ட அந்த வளாகத்தை புக்கிட் அமான் மற்றும் பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சோதனை செய்த போது இந்த இந்த மோசடி அம்பலத்திற்கு  வந்தது.

இந்தக் கும்பல் திருமண ஜோடிகளைத் தேடித் தரும் 'காபி மீட்ஸ் பேகல் டேட்டிங்' போன்ற இணையத்தளங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதாக நம்பப்படுகிறது. அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் இக்கும்பல் பின்னர்  மோசடிக் கும்பல்களால் நிர்வகிக்கப்படும் இல்லாத முதலீடுகளுக்கான இணைய இணைப்புகளை வழங்கி வந்துள்ளது.

இந்த சோதனையில், 19 மடிக்கணினிகள் மற்றும் 69 விவேகக் கைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் சார்பிலும் ஆஜரான  தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் லாவ் யீ யுன், குற்றவாளிகள்  தங்கள் குடும்பங்களை பராமரிக்க வேண்டியுள்ளதைக் கருத்தில் கொண்டு மிகக் குறைந்த அபராதத்தை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

அரசு தரப்பில் வாதாடிய  அரசு துணை வழக்கறிஞர்   முகமது ஜம்ஹரிர் முகமது ஜூஹிட், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு படிப்பினையாகவும் மற்றவர்களுக்கு பாடமாகவும் இருக்கும் வகையில்  அவர்களுக்கு கடுமையானத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.