SELANGOR

நாடு முழுவதும் உள்ள 525 தமிழ்ப் பள்ளிகளுக்கு 6,000 மடிக்கணினிகளை மித்ரா வழங்கும்

11 அக்டோபர் 2023, 6:33 AM
நாடு முழுவதும் உள்ள 525 தமிழ்ப் பள்ளிகளுக்கு 6,000 மடிக்கணினிகளை மித்ரா வழங்கும்
நாடு முழுவதும் உள்ள 525 தமிழ்ப் பள்ளிகளுக்கு 6,000 மடிக்கணினிகளை மித்ரா வழங்கும்

காஜாங், அக் 11- கல்வி இயக்கவியல் திட்டத்திற்காக நாடு முழுவதும் உள்ள  525 தமிழ்ப்பள்ளிகளுக்கும் புதுப்பிக்கப்பட்ட 6,000  மடிக்கணினிகளை மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்றப் பிரிவு வழங்கும்.

மித்ராவின் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பள்ளி கணினி உதவித் திட்டத்தின் கீழ் இந்த உபகரணங்கள் கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படும் என்று மித்ரா நடவடிக்கை குழுத் தலைவர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில்  தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு இந்த மடிக்கணினிகள் பயன்படுத்தப்படும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இன்றைய இலக்கவியல் யுகத்தில் ஒவ்வொரு மாணவருக்கும்  மடிக் கணினி மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இத்திட்டத்திற்காக மித்ரா 2.994 மில்லியன் ரிங்கிடை ஒதுக்கியுள்ளதாகவும் இதன் மூலம் கிட்டத்தட்ட 6 ஆயிரம் மடிக்கணினிகள் 525 தமிழ்ப்பள்ளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக நேற்று  இங்குள்ள காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு 75 மடிக்கணினிகள் வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மடிக்கணினிகள் மாணவர்களுக்கு முழுமையாக பயனளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த கணினிகள் அனைத்துப் பள்ளிகளுக்கும்  விநியோகிக்கப்பட்டுவிடும் என்று ரமணன் சொன்னார்.

இவ்வேளையில் கூகுள் எடுகேசன் பிரிவு இயக்குநர் ராஜா அஸ்மி அடாம்,  மித்ரா இயக்குநர் நவீந்திரன் நாயர், பள்ளியில் தலைமையாசிரியர் விஜயலட்சுமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இப்பாராட்டுகள் என்று அவர் கூறினார்.

காஜாங் தமிழ்ப்பள்ளியை தொடர்ந்து அனைத்து தமிழ்ப்பள்ளிக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

ஆக அதிகமாக ஜொகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளி 120 மடிக்கணினிகளும் ஆகக் குறைவாக 2 மடிக்கணினிகளும் வழங்கப்படவுள்ளது. குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு அந்த 2 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது என்று ரமணன் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.