ஷா ஆலம், அக் 10- போதைப் பொருளை வைத்திருந்ததாக
சந்தேகிக்கப்படும் நபரை துரத்திய போது ஆறு மீட்டர் உயரத்திலிருந்து
கீழே விழுந்ததில் போலீஸ் அதிகாரி ஒருவர் காலில்
காயங்களுக்குள்ளானார்.
தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள்
தடுப்புப் பிரிவைச் சேர்ந்த முகமது அஸ்ரின் யாஷிட் (வயது 32) என்ற
அந்த இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழு நேற்று மாலை 5.30
மணியளவில் கிள்ளான், தாமான் அண்டலாசில் உள்ள கடை ஒன்றில்
அதிரடிச் சோதனை மேற்கொண்ட போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான்
கூறினார்.
சம்பவ இடத்தை போலீஸ் குழு அடைந்த போது அந்த கடை வீட்டின்
முன்புற வேலியும் கதவுகளும் சாத்தப்பட்டிருந்தது. அருகிலுள்ள கடையின்
கூரை வழியாக சந்தேகப் பேர்வழி தப்ப முயன்றதைக் கண்ட அஸ்ரின்
கூரையில் ஏறி அவனைத் துரத்த ஆரம்பித்தார் என அவர் சொன்னார்.
குழாயைப் பிடித்து கீழே இறங்க முயன்ற போது அந்த குழாய் திடீரென
உடைந்து அவர் சுமார் ஆறு மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
எனினும் விடாது அந்த சந்தேக நபரைத் துரத்திச் சென்ற அவர் கடையின்
நடைபாதையில் அவனை மடக்கிப் பிடித்தார் என அவர் ஹூசேன்
தெரிவித்தார்.
அந்த ஆடவன் வைத்திருந்த தோள் பையைச் சோதனையிட்ட போது
அதில் 104.1 கிராம் எடை கொண்ட ஷாபு போதைப் பொருள் இரு
பிளாஸ்டிக் பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது
என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
உடலில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான், பந்தாய்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் அறுவை
சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஹூசேன் தெரிவித்தார்.








