ஷா ஆலம், அக் 10- கோல லங்காட், கேரித் தீவு கடற்கரை வழியாக
நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஒரு சிறுமி உள்பட 25 அந்நியக்
குடியேறிகளை கடல் போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர்.
நேற்று பின்னிரவு 1.00 மணியளவில் கடல் போலீசார் மேற்கொண்ட
அதிரடிச் சோதனையில் அந்த 25 பேருடன் இரு படகோட்டிகளும் கைது
செய்யப்பட்டதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் முகமது நோர் சாலே கூறினார்.
பதிமூன்று ஆண்கள் 11 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகியோரை
உள்ளடக்கிய அந்த அந்நிய நாட்டினர் மீது நடத்தப்பட்ட சோதனையில்
அவர்கள் செல்லத்தக்க பயணப் பத்திரங்களைக் கொண்டிராதது தெரிய
வந்தது என்று அவர் தெரிவித்தார்.
நான்கு முதல் 53வயது வரையிலான அவர்கள் அனைவரும் 14
நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்
சொன்னார்.
கைதான 25 பேரும் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி)
பிரிவின் கீழும் இரு படகோட்டிகளும் 2007ஆம் ஆண்டு மனித வர்த்தகம்
மற்றும் அந்நிய பிரஜைகள் கடத்தல் சட்டத்தின் 26ஏ பிரிவின் கீழும்
விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.








